Monday, 22 December 2014

திருவாலங்காடு: ஊரும் பேரும்!

                    

           எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆதங்கம் உண்டு. கூகுள் தேடு பொறியில்  எங்கள் ஊர் திருவாலங்காட்டைப் பற்றி தேடினால், சென்னைக்கு அருகில்  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  திருவாலங்காட்டைத்தான் காட்டும். நானும் தேடு பொறியில் விதவிதமான சொற்களைப் போட்டு தேடினாலும் அந்த திருவாலங்காட்டைப் பற்றிதான் நிறைய தகவல்கள் கிடைக்கும். எங்கள் ஊரை பற்றி ஒன்றும் இருக்காது.  முடிவில் ஏமாற்றமே மிஞ்சும்.

சரி.... இதை நாம்தான் சரிசெய்யவேண்டும் என்று முடிவு செய்து,  நான் எடுத்த படங்களையும் ஊரைப்பற்றியும்  எனக்கு தெரிந்தவரை பதிவேற்றிவுள்ளேன். 

திருவாலங்காடு காவிரி ஆற்றின் தென் கரையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.  மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் குத்தாலம் ஆடுதுறைக்கு இடையில் இருக்கிறது இவ்வூர்.  முன்பு மயிலாடுதுறை தாலுக்காவில் இருந்தது.  தற்போது குத்தாலம் தாலுக்கா புதிதாக உருவாக்கப்பட்டு அதில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.  முன்பு குத்தாலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டிருந்தது. தற்போது தொகுதி மறு சீரமைப்பில் பூம்பூகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டுள்ளது.
 


திருவாலங்காடு அருள்மிகு வடராண்யேசுவரர் சுவாமி திருக்கோயில்

பிரசித்திப்பெற்ற திருவாவடுதுறை மடத்திற்கு செல்ல எங்கள் ஊரில்தான் இறங்க வேண்டும். இங்கிருந்து 3 கிமீ இருக்கிறது திருவாவடுதுறை. நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் வாழ்ந்த ஊர் திருவாவடுதுறை. தோடியில் அடி பின்னியடித்த அவரது தெய்வீக ராகம் இன்றும் திருவாவடுதுறை காற்றில் தவழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.  மடத்தின்  பிரமாண்டமான  மதில் சுவரும், பெரிய சிவன் கோயிலும், தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு இணையான நந்தியும்   பார்ப்பவரை பரவசப்படுத்தும். ஆண்டுக்கு ஒரு முறை இங்கு மடத்தார் பட்டினப்பிரவேசம் செய்து மக்களுக்கு காட்சித் தருவார்.  திருவாவடுதுறை அன்ன மடமாக போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சோழ சாம்ராஜ்ஜியத்தின் மைய பகுதியில் எங்கள் ஊர் இருப்பது நாங்கள் பெற்ற பேரு என்றுதான் சொல்லவேண்டும். .  சேழ நாட்டிற்கே உள்ள பார்முலா இங்கும் இருக்கும்.  எல்லா பெரிய ஊர்களிலும் சோழர்களால் கட்டப்பட்ட  ஒரு பிரமாண்டமான சிவன் கோயில் இருக்கும். அதற்கென்று நிலபுலங்கள் இருக்கின்றன.  எங்கள் ஊரில் மேற்கு பக்கம் பார்த்த  அருள்மிகு வடராண்யேசுவரர் சுவாமி திருக்கோயில்  இருக்கிறது.   அம்மன் வண்டார்குழலியாக எழுந்தருளியுள்ளனர்.


திரு+ஆலங்காடு = திருவாலங்காடு

முன்பு ஆல மரங்கள் நிறைந்திருந்ததால் திரு-ஆலங்காடு என்று அழைக்கபெற்று. பின்பு அதுவே மருவி திருவாலங்காடு என்றானது என்று சொல்லக் கேள்வி. நான் சிறு வயதாக இருந்த போது காவிரிக்கரையின் ஓரத்தில் நிறைய ஆல மரங்கள் நிறைந்திருந்தது. ஆலம் விழுதுகளைப்  பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடிய காலங்கள் உண்டு. அதை 'கோண' மதகு என்று அழைப்போம். 

 திருவாவடுதுறை செல்லும் சாலையில்  இருக்கிறது திருவாலங்காடு அய்யனார் கோவில். திருவாலங்காட்டில் வாழும் பல சமூகத்தாருக்கு இதுதான் குலத் தெய்வம். இருபுரமும் இஸ்லாமியர்  குடியிருப்புகிடையில் அமைதியாக நின்றுக் கொண்டு தனது குடிபடைகளை காத்துவருகிறார்  திருவாலங்காடு  அய்யனார். எங்களுக்கும் இவர்தான் குலதெய்வம்.


திருவாலங்காடு அருள்மிகு வடராண்யேசுவரர் சுவாமி திருக்கோயில்

இங்கு சிவன் வடராண்யேசுவராகவும், பார்வதி தேவி வண்டார்குழலியாகவும் எழுந்தருளியுள்ளார்.இங்கு தலவிருச்சமாக ஆலமரம் போற்றப்படுகிறது. திருவாவடுதுறை ஆதினத்தை சார்ந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைஅவர்கள் 'திருத்துருத்தி புராணத்தில்'  இந்தக் கிராமத்தை பற்றியும் கோவிலைப் பற்றியும் குறிப்பு எழுதியுள்ளார்.

சோழர்கள் காலத்தில்  இக் கோயில் புகழ்பெற்று விளங்கியது எனலாம்.  மூன்றாம் குலோத்துங்கனால் இக் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு வடராண்யேசுவர சுவாமியை வணங்கினார் என்று கூறப்படுகிறது.  இக் கோயிலை முதலாம் குலோத்துங்கச் சோழன் கிபி1178-1218வாக்கில் கட்டினார். 

திருவாவடுதுறை ஆதினத்தால் இக் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.  பரத முனிவரும் அவரது மனைவி சுபத்ராவும் குழந்தைவரம் வேண்டி சிவனை வேண்டிய போது...வானத்திலிருந்து ஒரு குரல்  'திருவாலங்காடு சென்று அங்கு உள்ள புத்திரகாமேஸ்வரரை  தருசிக்கவும்' என்றது. அதன்படி திருவாலங்காடு வந்த அந்த தம்பதிகள்,  புத்திரகாமேஸ்வரரை தரிசித்து இங்கு உள்ள  குளத்தில் நீராடி.... 'புத்திரகாமேசவர யாகம்' செய்து, புத்திரபாக்கியம் பெற்றனர்.   புத்திரபாக்கியம் பெற சிறந்த தளமாககவும் இது விளங்குகிறது.  அதோடு மட்டுமல்லாமல் சிவனுக்கு சனி தோஷம் நிவர்த்தி செய்த தளமாகவும் இக் கோயில் போற்றப்படுகிறது. 

நந்தி மற்ற கோயில்கள் போலல்லாமல் தரைக்கு கீழே இருக்கும். அதனாலயே 'பாதாள நந்தி' என்று அழைக்கப்படுகிறது. இக் கோயிலில்  முருகன் தனது மனைவியருடன் காட்சித் தருகிறார்.  தெக்ஷனாமூர்த்தி மிக இளமையான கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு எமனுக்கு என்று  தனி சன்னிதியும் உண்டு.   கருவரைக்கு முன் ள்ள சந்தன பிள்ளையார் இரட்டை பிள்ளையாராக காட்சித் தருகிறார்.

அம்மனுக்கு வளைகாப்பு

ஒவ்வொரு வருடத்திலும் பங்குனி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு  அமாவாசை அன்றும்   புத்திரபாக்கியம் பெற புத்திரகாமேஸ்வர தீர்த்த  பூஜை செய்யப்படுகிறது. அதோடு இங்கு அம்மனுக்கு ஆடி மாதத்தில் 'வளைகாப்பு'செய்யப்படுகிறது. 

புத்திரபாக்கியம் பெற விரும்புவோர் இந்த வளைகாப்பில் கலந்துக் கொண்டு அம்மனின் அருளைப் பெறுகின்றனர்.எப்படிச் செல்வது.

சென்னையிலிருந்து 260 கிமி. சென்னையிலிருந்து பேருந்து மார்க்கமாகவோ அல்லது புகைவண்டியிலோ வரலாம். மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் தங்கி சுற்றி உள்ள கோயில்களை தரிசிக்கலாம்.  திருவாலங்காடு வர இரயில் மார்க்கம் என்றால் அருகில் நரசிங்கன்பேட்டை அல்லது குத்தாலம் ரயில் நிலையத்தில்  இறங்கலாம்.


அருகில் உள்ள தளங்கள்:
  • திருமணஞ்சேரி         : 13 கிமி
  • கஞ்சனூர்                      :  5 கிமி
  • சூரியனார்கோயில்       :  7 கிமி
  • திருவாவடுதுறை        :  3 கிமி
  • மயிலாடுதுறை            :  15 கிமி
  • குமபகோணம்              : 21 கிமி
  • திருவிடைமருதூர்       :  15 கிமி
  • திருபுவனம்                   :  17 கிமிபிற கோயில்கள்.

இங்கு சிவன் கோவில் தவிர ஐய்யனார் கோவில், பிள்ளையார் கோவில், கன்னியம்மன் கோவில்,முருகன் கோயில், மாதா  கோவில்,  முனீஸ்வரன் கோயில் இருக்கின்றது. 


சமூக  அமைப்பு

ஊரில் கார்காத்த பிள்ளைமார், வாணிய செட்டியார்கள்,  முதலியார்கள், ஆதி-திராவிடர்கள், படையாட்சிகள், வள்ளுவர்கள், முதலியார்கள், கொஞ்சமாய் தெலுங்கு பேசும் நாயுடுக்கள், கொஞ்சமாய் பிராமணர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள்,  கொஞ்சமாய் நாடார்கள் என்று கலந்துக்கட்டி வாழ்கிறார்கள். 

இங்கு வெள்ளாளத் தெரு, சாலியத் தெரு, சன்னதி தெரு, அக்ரகாரம், மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ரயிலடித் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, எலவத்தடி, மாதாகோயில் தெரு, தி-பண்டாரவடை என்று ஊர் விரிந்து பரந்திருக்கிறது.  இப்போது அக்ரஹாரம் முழுவதும் இஸ்லாமியர்கள் குடியேறி உள்ளனர்.

இங்கு கனிசமான அளவில் ஆதிதிராவிடர்கள் வசிக்கின்றனர்.  இங்கு யாரும் யாரையும் அடிமைப்படுத்துவதில்லை. எல்லோருக்கும் நில புலன்ங்கள் இருக்கின்றது.   அவரவர் ஜாதிக்கு என்று  தனித்தனி பஞ்சாயத்துகள் இருக்கின்றன. பொதுவான பஞ்சாயத்து என்று எதுவும் இல்லை.

விவசாயம்.

முழுக்க முழுக்க நெல் சாகுபடியைக் மையமாகக் கொண்டது இவ்வூர். இங்கு நெல் மூன்று போகம் விளைவிக்கப்பட்டு, ஒரு போகம் பம்ப்செட்டு மூலமாகவும் ஒரு போகம் காவிரி பாசனம் மூலமாகவும்  சாகுபடி செய்யப்படுகின்றது. நெல் தவிர வாழை இங்கு அதிகம் பயிர்செய்யப்படுகிறது.  நெல், வாழை, தென்னை முக்கிய பயிர்களாகும். கரும்பு எப்போதாவது பயிரிடுவார்கள். 

இங்கு காவிரி ஆற்றில் சட்ரஸ் என்ற தடுப்பனை இருக்கிறது. இங்கிருந்து வெட்டாறு என்ற ஆறு பிரிகிறது. 

எல்லா கிராமத்தையும் போல இங்கேயும், விளை நிலங்களை பிளாட்டு போட்டு விற்க ஆரம்பித்துவிட்டனர் என்பதுதான் வேதனை?!.

-தோழன் மபா.
greatmaba@gmail.com